Sunday, August 25, 2013

நீரிழிவு நோய் வருமென்ற பயமா? பலனளிக்கிறது பஸ்சிமோத்தாசனம் - யோகாசன பயிற்சி

நீரிழிவு நோய் வருமென்ற பயமா? பலனளிக்கிறது பஸ்சிமோத்தாசனம் - யோகாசன பயிற்சி

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு குறைபாட்டு தாக்கம் பலரையும் பாதித்திருக்கிறது. பலர் இன்னும் இந்த இதற்கு ஆட்படும் அபாயத்தில் இருந்து வருகின்றனர்.
இந்திய இளைய சமுதாயத்தில் 4 சதவீதம் பேர் நீரிழிவு குறைபாட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம் தான் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் இன்று வரை தீர்மானமாக எந்த முடிவுக்கும் மருத்துவ உலகம் வர இயலவில்லை. நீரிழிவு நோயா அல்லது உடலின் ஒரு குறைபாடா என்றால் அது நோயல்ல, குறைபாடு என்பதே உண்மை.

பிறவி ஊனம் மட்டுமே குணப்படுத்த முடியாதது என்பர். ஆனால் நீரிழிவு என்பதை பொறுத்த மட்டில் பெரும்பாலோருக்கு இடையில் வரும் ஒரு ஊனம். ஆக, இந்த ஊனம் ஏற்படாமல் தடுக்க முயல வேண்டும். அதற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுப்பது யோகாசனங்கள் தான். அதிலும் குறிப்பாக யோகாசனங்களில் பஸ்சிமோத்தாசனம் நீரிழிவை தடுக்கிறது. மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. இந்த ஆசனத்தை செய்வதும் எளிது. உட்கார்ந்த நிலையிலான ஆசனங்களில் நீரிழிவுக்கு மிகவும் பயன்தரக்கூடிய ஒரு ஆசனம் இது என்று கூறலாம்.
செய்யும் விதம்

முதல் நிலை

விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் சேர்த்தாற் போல் நீட்டி வைத்துக் கொள்ளவும். இரண்டு கைகளை காதுகளை ஒட்டினாற் போல் தலைக்கு மேல் நீட்டி வைத்துக் கொள்ளவும். கைவிரல்கள் சேர்ந்திருக்க வேண்டும்.
இப்போது மூச்சை நன்றாக இழுத்துக் கொள்ளவும். இப்போது கைகள் காதுகளை விட்டு விலகாதபடி மூச்சைப் பிடித்து எழுந்து உட்காரவும். இது தான் முதல்படி நிலை.
இரண்டாவது நிலை
இப்போது மூச்சை விட்டபடியே முன்னுக்கு குனிந்து கால்களின் கட்டை விரல்களை, கைகளின் ஆள்காட்டி விரல், நடுவிரல் இவை இரண்டையும் கொக்கி போல் மடக்கி பிடித்துக் கொள்ளவும். இது இரண்டாவது நிலை.

மூன்றாவது நிலை

இந்த நிலையில் மூச்சை ஒரு தரம் இழுத்து விட்டவாறே இன்னமும் கீழே குனிந்து முழங்கைகள் முட்டிக்கால்களை ஒட்டி தரையை தொட்டவாறு இருக்கும் படியான நிலைக்கு வரவும். அதாவது முகத்தை முழங்கால்களின் சந்து வரை எட்டிக் குனியவும். மடக்கின் முழங்கைகள் தரையில் படவேண்டும். இந்த நிலையில் ஐந்து முதல் பத்து எண்ணும் வரை இருக்கலாம். பின்னர் கைகள் மட்டும் கால்கள் இரண்டின் பெருவிரல்களை மட்டும் பிடித்திருக்கும் படியான நிலைக்கு நிமிர்ந்து வரவும்.
இதற்கடுத்து கைகள் இரண்டையும் முதல்நிலையில் சொன்னது போல் காதுகளை ஒட்டியிருக்கும் படியான நிலையில் வைத்து நிமிர்ந்து உட்காரவும். பின்னர் உடலை சிறிது சிறிதாக பின்னோக்கி சாய்ந்து படுக்கை நிலைக்கு வரலாம். இப்போது மூச்சை இறுக்கிப் பிடிக்காமல் சாதாரண நிலையில் விட்டு வரவும்.
இவ்வாறு செய்து முடிப்பது ஒரு பஸ்சிமோத்தாசனம் ஆகும். இது போல் மூன்று முதல் நான்கு முறை செய்யலாம்.
ஏற்படும் சிரமங்கள்
சிலருக்கு ஆரம்ப நிலையில் படுத்து எழுந்திருப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். கைகளை தரையில் ஊன்றினால் தான் எழுந்திருக்கவே முடியும் என்ற அளவில் இருப்பார்கள். ஆசனங்களை செய்ய முயற்சிக்கும் தொடக்க காலங்களில் இது போல் அசவுகரியங்கள் எழுந்தால் மனம் தளரக்கூடாது. தரையில் கைகளை ஊன்றித்தான் எழ வேண்டி இருந்தால் சில நாட்கள் அப்படியே செய்யலாம். நாளடைவில் முறையான பயிற்சி வந்து விடும். சிலருக்கோ, கைகளை மேலே காதுகளை ஒட்டினாற் போல் வைத்துக் கொண்டு எழுந்திருக்க முடியாது. கைகளை முன்னுக்கு வீசி பேலன்ஸ் செய்து எழுந்திருந்தால் தான் எழுந்திருக்க முடியும். இதுவும் நாளடைவில் சரியாகி விடும்.
சிலருக்கு கால் விரல்களை கைகளால் தொட முடியாது. பொதுவாகவே முதுகெழும்பு கட்டை பாய்ந்து விட்டிருப்பதால் தான் இப்படி முன்னோக்கி குனிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் பழக பழக கால் விரல்களை கைகளால் பிடித்து விடலாம். சிலருக்கு கால் விரல்களை பிடிக்க முயலும் போது  முழங்கால் தூக்கிக் கொள்ளும். ஆனால் முழங்கால் மடிக்காமலேயே கூடுமான வரை குனிந்து தொட முயற்சிக்க வேண்டும். இப்படி பழகி வரும் போது தொடையில் உள்ள தசைகளும், நரம்புகளிலும் வலி ஏற்படுவதுண்டு. ஆனால் சில நாட்களில் சரியாகி விடும். சிலருக்கு முழங்காலில் முகத்தை கொண்டு வைக்க முடியாது. இதுவும் விடா முயற்சியுடன் பழகும் போது சரியாகி விடும். முடியாது என்பது எதுவுமே இல்லை.
ஆசனத்தின் பலன்கள்

பஸ்சிமோத்தனம் செய்யும் போது, குடல்கள், பித்தப்பை, இரைப்பை முதலியன நன்றாக அமுக்கப்படுகின்றன. உடலின் உயிராற்றலை வலுப்படுத்தும் முதுகெழும்பு, முதுகு நரம்பு வளைத்து இழுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு குறைபாடு உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் ஆண்மை அதிகரிக்கிறது. மலட்டுத் தனம் நீங்குகிறது. வயிற்று வலி, தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்பு வலி, முதுகுவலி, பலவீனம் முதலியவை நீங்குகிறது. பெண்களிடத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் மாதவிடாய் கோளாறுகள் பூரணமாக குணமாகி விடும். இடுப்பு வலுவடையும். இளம்பெண்கள் திருமணத்திற்கு முன் இந்த ஆசனத்தை செய்து வருவதால் இடுப்பு சார்ந்த இனப்பெருக்க உறுப்புகள் வலுவடைந்து திருமணத்திற்கு பின் எளிதான சுகப்பிரசவம் உண்டாக வழி வகை ஏற்படும்.
எச்சரிக்கை
இந்த ஆசனத்தை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்ய கூடாது. அறுவை சிகிச்சை நடந்து குறிப்பிட்ட காலங்கள் ஆகி இருந்தால் சிறந்த ஆசன நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று ஆசனத்தை செய்யலாம். வழக்கமாக ஆசனத்தை செய்து வரும்ட கர்ப்பிணிகள் ஆசனத்தை முழுமையாக செய்யாமல் உட்கார்ந்த நிலையில் காதுகளை ஒட்டி கைகளை நிமிர்த்திய நிலையில் ஆசனத்தை முடித்துக் கொள்ள வேண்டும். முன்பக்கம் குனிந்து முழங்காலை தொடும் நிலைக்கு போகக் கூடாது.
ஆசனங்களை பழக்கமில்லாத புதிய கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை எக்காரணம் கொண்டு செய்யக் கூடாது.
மனதை ஒருமுகப்படுத்த இந்த ஆசனம் மிகவும் உதவுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

Saturday, August 17, 2013

யோகாசன பயிற்சி

யோகாசன பயிற்சி - பகுதி1

இப்போதைய சமுதாயத்தில் பரபரப்பு, மனஅழுத்தம் என்று எத்தனையோ விடயங்களை அன்றாடம் சந்திக்க வேண்டியிருக்கிறது. இவற்றிற்கான தீர்வு என்ன


என்பது பற்றி சிந்தித்தால் விடாத இறை சிந்தனை மட்டுமே என்று ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு தொடர்ந்து இறைசிந்தனையில் திளைப்பதால் நம்முடன் ஒரு சக்தி உடன் இருப்பது போன்ற உணர்வை பெறுகிறோம். மனது கடினமான நிலையிலிருந்து விடுபடுகிறது.
உடலும், மனமும் ஒன்றுக்கொன்று மிகநெருங்கிய தொடர்பில் இருக்கிறது. மனதில் குழப்பமும், நெருக்கடியான எண்ணங்களும் சூழ்ந்து கொள்ளும் போது உடலானது இயற்கையாகவே சோர்ந்து போகிறது. தொடர்ந்து இது போன்ற நிலை எழும் போது ஒருகட்டத்தில் அது நோயாகவே மாறிப்போகிறது.
இப்போதும் கூட ஒரு நிகழ்வை காணமுடியும். மனப்பிறழ்ச்சி உள்ளவர்கள் என்று கூறப்படும் சாலையில் திரியும் நோயாளர்களை கவனிக்க யாரும் இருப்பதில்லை. அவர்களுக்கு நேரத்திற்கு தகுந்த உணவும் இருப்பதில்லை. ஆனாலும் அவர்கள் பெரிதாக நோயால் பாதிக்கப்படாதவர்கள் போல் தான் இருக்கின்றனர். இதற்கு காரணம், அவர்கள் மனதிற்கு பெரிதாக சிந்திக்கும் திறன் இருப்பதில்லை என்பதால் தான் அவர்கள் அவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அனைத்து திறனும் படைத்த சாதாரண வாழ்க்கையில் ஈடுபடும் சராசரி மனிதன் எப்போதும் இயல்பான அமைதியான மனநிலையிலும், நோயற்ற உடலை பெறுவதற்கும் ஒரே வழி யோகசானங்களை பயில்வதும், மனதை செம்மைப்படுத்தும் தியானங்களை கற்றுக் கொள்வதும் தான் என்பதே எப்போதும் தீர்வாக இருக்கிறது.
யோகாசனம் என்பது ஒரு அற்புதப் பயிற்சி. மனோதத்துவப்பயிற்சி என்றும் சொல்லலாம். மனநிம்மதியை இழந்து விடாமல் வாழ்க்கையை அமைதியாகவும், ஒரு ஒழுங்குடனும் சீரான மனநிலையில் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. தவிர்க்க முடியாத நிலையில் உடலில் தோன்றும் நோய்களை அகற்றும் அற்புத மருத்துவ விஞ்ஞானமாகவும் இது இருக்கிறது. கூடவே மனதில் எழும் கெட்ட எண்ணங்களை அகற்றி, மனதை ஒரு நிலைப்படுத்தும் தன்மையும் யோகாசனத்திற்கு உண்டு.
யோகம் என்ற சொல்லுக்கு தமிழில் சரியான பொருள் ஒருங்கிணைத்தல் என்பது. ஆசனம் என்றால் உடலை அமர்த்தும் நிலை. மனிதன் தன்னுள் நிறைந்து கிடக்கும் சக்தியை ஆற்றலை திறனுடன் கண்டு கொள்ளவும், அந்த ஆற்றலை அடக்கியாளக் கற்றுக் கொள்வதும் தான் யோகப்பயிற்சிகளின் மூல நோக்கம். இதே வேளையில் இந்த பயிற்சிகளை செய்யும் போது மனதையும் ஒரு நிலைப்படுத்த முடிகிறது. மூன்றாவதாக, இந்த பயிற்சிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்களை வராமல் தடுத்து விடுகின்றன. யோகசனக்கலை என்பது இந்திய நாட்டில் தான் முதலில் தோன்றியது. முனிவர்களும், சித்தர்களும் தங்களது தியான நிலையில் உறுதியுடனும், உடல் நோய்வாய்ப்படாமலும் இருக்க இந்த கலையை கண்டறிந்தனர்.
தமிழ்மருத்துவமான சித்தமருத்துவத்தின் அடிப்படையில் முக்கிய பங்கை யோகக்கலை வகிக்கிறது. சித்தர்கள் ஆயிரக்கணக்கில் இந்த உலகில் சூட்சுமாக இன்றும் இருந்து வருகின்றனர் என்று சொல்லப்பட்டு வருகிறது. இவர்களில் திருமூலர், ராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வான்மீகி, கமலமுனி, லோகநாதர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதரு, பாம்பாட்டி சித்தர், சட்டை முனி, சுந்தாரனந்த தேவர், குதம்பைச்சித்தர், கோரக்கர் ஆகிய பதிணென் சித்தர்கள் தமிழ் மருத்துவத்திற்கு பெரும்பங்கை அளித்திருக்கிறார்கள்.
இவர்கள் தான் யோகாசனம் மற்றும் நாடிசுத்தி பிராணயாமம் ஆகியவற்றின் மனித உடலில் தோன்றும் நோயை போக்கவும், நோய் வராமல் தடுக்கவும் முடியும் என்று கண்டறிந்து மனித குலத்திற்கு அதற்கான சூட்சுமத்தை சொல்லியும் வைத்தார்கள். பதஞ்சலி முனியின் யோகசூத்திரத்தில், " மனதையும், மனதில் எழும் எண்ணங்களையும் நன்கு கட்டுப்படுத்துவதே யோகம். இந்த பயிற்சியில் ஒருவர் முழுமை பெறும் போது அவர் தமக்குரிய தூய்மை¬யும், பிரகாசமும் பொருந்திய நிலையில் நிறுத்தப்படுகிறார். மற்ற வழிகளை பின்பற்றும் போது மனநிலையில் ஏற்படும் விபரீத உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுகிறார்" என்று சொல்லப்பட்டுள்ளது.
யோகாசனங்கள் உடலை நோயின் பிடியில் விழாமல் தடுத்து நிறுத்துகின்றன. தற்போது உலகம் முழுவதும் யோகசனத்தின் பலன்கள் உணரப்படுவதால் மேற்கத்தியர்களும் இந்த கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். யோகசனத்தை கற்றுக் கொள்ள உடல் நிலை இடம் தராத நிலையில் உள்ளவர்கள் சாதாரண அமர்ந்த நிலையில் இருந்த படி தியானிக்க கற்றுக் கொண்டு உடலையும், மனதையும் சாந்தப்படுத்திக் கொள்கின்றனர். கடுமையாக உடலை வளைத்து பிரயாசைப்பட்டு செய்ய தேவையில்லாத நிலையில் எளிதாக செய்த பத்மாசனம் போன்ற எளிதான உட்காரும் நிலை ஆசனங்களையும், படுத்தபடி தியானிக்க சவாசனத்தையும சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்.
இது பற்றி இனி இங்கு விரிவாக காணலாம். யோகாசனங்களுக்கு போகும் முன்பாக மனதை ஒழுங்குபடுத்துவது முக்கியமானது. அனைத்து விதமான கெட்ட பழக்கங்களையும் விட்டொழிப்பதும் முக்கியம். தொடக்க நிலையில் தியானத்தை கற்றுக் கொள்வது பற்றி பார்க்கலாம். பிறகு யோகாசனத்தின் சூரியநமஸ்காரம் முதல் நௌலி, ஒட்டியானா வரையிலான ஆசனங்களை கற்கலாம்.
தியானம்
எதிலும் ஒருங்கிணைப்பு உள்ளவர்களுக்கு எதுவுமே தியானம் ஆகி விடுகிறது என்பது தான் யதார்த்தம். இங்கு சுலபமாக தியானம் செய்யும் முறை குறித்து ராமகிருஷ்ண மடத்து துறவியான சுவாமி ஹர்ஷானந்தர் சொல்வது பற்றி பார்க்கலாம்." மதவித்தியாசம் இல்லாமல் எந்த தெய்வத்தையும் தியானிப்பதன் மூலம் இறைக்காட்சியை பெற்று முடிவில் மோட்சத்தை பெற முடியும் என்று பக்தியோகத்தில் கூறப்படுகிறது. எந்த தெய்வத்தை நாம் தியானிக்க விரும்புகிறோமோ அதனை இஷ்ட தெய்வம் என்கிறோம். தியானிக்க நினைக்கும் சாதகன் தனது மனதிற்கு இயைந்த இஷ்ட தெய்வத்தை எண்ணி தியானிக்கலாம். அந்த தெய்வம் என்பது அவனது குலதெய்வமாகவோ அல்லது வேறெந்த தெய்வமாகவோ இருக்கலாம்.
சிலர் தனக்கான குருவை மானசீகமாக எண்ணியிருப்பார்கள். அவர்கள் அந்த குருவிடம் தீட்சை பெற்று தியானத்தை தொடங்கலாம்.
தியானம் செய்யும் முறை
1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குல தெய்வமாகவோ உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.
2. தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காலை 5 அல்லது 6 மணி. மாலை 6.30 அல்லது 7.30 மணி) முடிந்தவரை குறிப்பாக அந்த நேரத்திலேயே தியானம் செய்ய முயற்சி செய்யவும்.
3. வீட்டில் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜையறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜையறை இல்லையெனில் இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.
5. சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்த உதவும்.
6. இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்து செல்லவும். அங்கு பன்னிரெண்டு இதழ்கள் கொண்ட சிவப்பு தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அதில் உயிருணர்வுடன் அமர்ந்திருப்பதை எண்ணவும்.
7. இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகி பிரார்த்திக்கவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றிற்காக பிராத்திக்கவும்.
8. ஐந்து, பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.
9. பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் "ராம, ராம" என்று தொடர்ந்து ஜெபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 இன் மடங்காக இருக்க வேண்டும்.
10. தியாத்திற்கு பிறகு உடனடியாக எழுந்திருக்க வேண்டாம். தொடர்ந்து சிறிது நேரம் அமர்ந்து மனதுக்கு அமைதி தரும் ஆன்மீக புத்தகங்களை படியுங்கள்.
தியானத்தின் பலன்களை பற்றி அடுத்து பார்க்கலாம்.
தொடரு

Labels:

நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி

நாம் பறவைகள் அருகில் செல்லும் போது! - யோகாசனப் பயிற்சி - பகுதி 2

நான் பறவைகள் அருகில் செல்லும் போது...

மாணவர்: நாம் பறவைகள் அருகில் செல்லும் போது ஏன் பறக்கின்றன?
தத்துவ ஞானி ஜே.கிருஷ்ண மூர்த்தி: நீங்கள் பறவைகளின் அருகில் செல்லும் போது அவைகள் பறக்காமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நீங்கள் பறவைகளை தொட முடிந்தால் அவைகளுடன் நட்பாக இருக்க முடிந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்! ஆனால் பாருங்கள் மனிதர்களாகிய நாம் கொடூரம் மிக்கவர்கள். நாம் பறவைகளை கொல்கிறோம், சித்திரவதை செய்கிறோம், அவைகளை வலையில் சிக்க வைக்கிறோம், கூண்டுக்குள் அடைக்கிறோம். அழகான கிளி, கூண்டில் அடைபட்டிருப்பதைப் பற்றி நினைத்துப் பாருங்கள்! ஒவ்வொரு மாலையும் அதன் ஜோடியை அழைக்கிறது. மற்ற பறவைகள் வானில் பறந்து செல்வதை பார்க்கிறது. இவை அனைத்தும் நாம் அப்பறவைகளுக்கு செய்யும் போது அவைகள் நாம் அருகில் செல்லும் போது அச்சமின்றி இருக்குமா?

ஆனால் தனிமையான ஒரு இடத்தில் நீங்கள் அமைதியாக, சலனமற்று உண்மையிலேயே மென்மையுடன் அமர்ந்திருக்கும் போது, பறவைகள் உங்கள் அருகில் வருவதைப் பார்ப்பீர்கள்; அவை உங்கள் அருகில் வட்டமிடும். நீங்கள் அவைகளுடைய கவனமான அசைவுகளை, மென்மையான அலகுகளை, அசாதாரமாண, மற்றும் அழகான இறகுகளையும் காண்பீர்கள். அன்புடனும், அச்சமற்றும் இருக்க வேண்டும். விலங்குகள் நம்முள் உள்ள பயத்தை உணரும் தன்மை உடையன. அவைகளும் பதிலுக்கு அச்சமுற்று பறந்து செல்கின்றன.

ஓரிரண்டு நிமிடங்கள் மட்டும் நீங்கள் ஓர் மரத்தடியில் அமைதியாக அமர்ந்து இருந்தால் இது ஏற்படாது. ஏனெனில் பறவைகள் குறுகிய காலத்தில் நம்முடன் பழகிவிடாது. ஒரே மரத்தடியில் தினமும் சென்றமர்ந்தால், உங்களை சுற்றியுள்ள அனைத்தும் உயிரோட்டமிக்கவை என்பதை உணர்வீர்கள்.

- மாணவர்களுடன் உரையாடல். ( வாட் டஸ் பியர் டு யூ? என்ற புத்தகத்திலிருந்து)

அமைதியான மனநிலையில் நடந்து செல்வது கூட தியானமாகி விடுகிறது என்று குறிப்பிட்டிருந்தோம். இயக்கச்செயல்களை ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் ஒழுங்குபட்ட நிலையில் செய்யும் போது அது யோகாசனமாகிவிடுகிறது. யோகா என்பது ஒரு மதம் அல்ல. அது பெரிய தத்துவம், ஒரு கலை, விஞ்ஞானம் ஆகியவற்றுடன் கூடிய வாழ்வாங்கு வாழ ஒர் அமைப்பு. யோகாவின் நோக்கம் சரீரத்திற்கும் மனதிற்கும் இடையிலான, தனிப்பட்ட சக்திக்கும், பிரபஞ்ச சக்திக்கும் இடையிலான, பரிபூரண வியாபகத்தை விருத்தி செய்வதாகிறது. உலகில் தோன்றிய மிகச்சிறந்த ஞானிகளால் யோகா மக்களுக்கு தரப்பட்டது. சரீரத்தையும், மனத்தையும் முழுமையான ஆய்வு செய்வதற்கான முயற்சிக்கான விதையே யோகா.

யோகத்தில் இரண்டு அங்கங்கள் இருப்பதாக சொல்லலாம். அமைதியான மனநிலையுடன் கூடிய தியானம் இதை ஒழுங்குபடுத்தப்பட்ட மூச்சுப்பயிற்சி அல்லது பிராணயாமம் என்று சொல்லலாம். மற்றொன்று உடலின் உறுப்புகளுக்கு வலிவு தரும் யோகப்பயிற்சிகள். யோகாசனம் உள் உறுப்புகளுக்கு நல்ல ஆக்கம் கொடுத்து, நல்ல பரிணாம விளைவுகளுக்கு உந்துதலை அளிக்கிறது. அது எழும்புகளை பலப்படுத்துவதுடன், உள்ளுறுப்புகளையும் பரிபூரண நலத்துடன் வாழ உருவாக்குகிறது. யோகாப்பயிற்சி, இருதயத்தை பலப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரித்து சீராக்குகிறது. சர்வாங்காசனம் என்னும் பயிற்சியால் உடல் தலைகீழான நிலையில் இரத்தம் பாய்ந்து, இருதயம் வலுவாகிது. மலச்சிக்கல் குணப்படுத்தப்படுகிறது. வெளித்தள்ளும் பானை வயிறு, சரிசமமாக பலப்படுகிறது. தைராய்டு கோளம் தூண்டப்பட்டு உடலின் செயல்கள் சரியாக அமைய செய்கிறது. உடலை சீர் செய்யும் யோகாசன பயிற்சிகள் உடலை ஆரோக்கிய நிலையில் வைக்கின்றன. மனமும், சிந்தனையும் சிறக்க தியானிப்பது அவசியமாகிறது.

நாம் பிறந்தது முதல் சுவாசிக்கின்றோம். யோகப்பயிற்சியில் இந்த சுவாசம் மிக முக்கிய அங்கமாக செயல்படுகிறது. தற்போது அறுவை சிகிச்சையில் மூச்சு முறை என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சொல்கிறார்கள். அகம் என்னும் அறிவு, மூச்சை பின்பற்றி வந்தே தெளிவு நிலையடைகிறது. பின்னர் அண்டவெளியுடன் கலக்கிறது என்கிறார் யோகா£ குரு யோகிதஸம். மூச்சை கட்டுப்படுத்தி சுவாசத்தை மாற்றி அமைப்பதன் மூலம் சில நோய்களை எளிதாக தீர்க்க முடியும் என்கிறார் அவர். நோயாளரை நேர்க்கோட்டில் படுக்க வைத்து படுத்திருப்பவரின் நாசி துவாரத்தின் மேல் புற எலும்பில் விரல் வைத்து அளவான, மென்மையான, அதிகம் பிரிவுடையதாக மாற்றி மாற்றி படிப்படியே நேரம் அதிகமுள்ளதாக மற்றவர் லேசாக அழுத்தினால் நோய்கள் தீருவதை கண்கூடாக காணலாம். மனித உடலில் சக்தி மைய உருவத்தில் மூக்கு தான் அமைந்திருக்கிறது என்று அவர் தனது நூலில் குறிப்பிடுகிறார். ஒழுங்குபடுத்தப்பட்ட மூச்சை யோக மூச்சு என்கிறார் அவர்.

ஒழுங்குபடுத்தப்பட்ட மூச்சால் உடல் நோய் அணுகாவண்ணம் காக்கப்படுகிறது. அதாவது இன்றைக்கு அறிவியல் ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 100 சதவீதம் நோய்த்தொற்று இல்லாத உணவு என்று சான்றிதழ் தரப்பட்ட உணவை கூட அது சுத்தமானது என்று சொல்ல முடியாது.  ஏனென்றால் மனம் ஒன்றை ஏற்க இயலாத நிலையிலும், திருப்தியில்லாத நிலையிலும் உள்வாங்கப்படும் அந்த உணவு விஷமாகவே மாறும் என்கிறார். ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூட இதை உறுதியாக சொல்லியிருக்கிறார்.

தற்போது இந்தியாவில் ஊழலை எதிர்த்து ஜன்லோக்பால் மசோதவை நிறைவேற்ற உண்ணாநோன்பு மேற்கொண்டிருக்கும் அன்னாஹசாரேவை பார்க்க முடியும். முப்பது வயதிற்குள்ளாகவே புலன்களின் வலிமை குறைந்து உடல் சோர்வடைந்து பலர் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியிலே 74 வயதிலும் துள்ளல் ஓட்டத்துடனும், தொடர்ந்து உண்ணாநோன்பு இருந்தும் அவரது உடலில் சுறுசுறுப்புக்கு குறைவில்லை. இது போல் இந்த உலகின் சில பகுதிகளில் நூற்றி ஐம்பது வயதைக்கடந்தும் சிலர் புலன்களில் எந்த சோர்வும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களை பார்க்கும் போதெல்லாம ஆச்சரியம் மேலிடுகிறது. உடலை இறுக்கும் காயகல்பம் தான் ஆயுளை நீட்டித்து வாழ செய்கிறது என்பதே இந்த ஆச்சரியத்திற்கான விடை. சித்தர்கள் காயகல்பத்தால் தான் பல்லாண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்கள்.

பறவைகளை போல் விண்ணில் மனிதர்களும் பறக்க முடியும் என்ற சாதனையை வெறும் இயந்திரத்தின் மூலம் நாம் சாதித்துக் கொண்டிருக்கும் போது, சித்தர்கள் தியானத்தின் மூலம் தங்கள் மனதை நிலைநிறுத்தி அந்தரத்தில் சில விநாடிகள் அப்படியே நிலைநிறுத்துவதை பார்க்க காணமுடிகிறது. மூச்சடக்கி பல மணி நேரங்கள் நீருக்குள் மூழ்கி இருப்பதை பார்க்க முடிகிறது. இதெல்லாம் எப்படி சாத்தியமானது?

இதற்கு மட்டுமல்ல, உயிரையே எடுக்க வரும் எமனை கூட உதைத்து விரட்ட முடியுமாம் சுவாசிப்பது குறித்த ரகசியம் தெரிந்தால்!
இதை சொன்னவர் திருமூலம்.

" ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கு
காற்றை பிடிக்கும் கணக்கறிவாளரில்லை.
காற்றை பிடிக்கும் கணக்கறிவாளருக்கு
கூற்றை உதைக்கும் குறியதுவாமே!"

என்கிறார் திருமூலர். பிராணயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியால் ஏற்படும் பலனுக்கு திருமூலரின் இந்த  பாடலை விட சான்று வேண்டுமா? திருமூலரின் மூச்சுபயிற்சி முறைகள், ஆயுளை நீட்டிக்கும் காயகல்ப முறைகள் தான் இன்றைக்கு பலன் நிறைந்த பயிற்சியாக உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்கூறும் நல்லுலகிற்கு வாய்த்த திருமூலர் முதல் இந்தியாவின் மிகப்பெரிய தத்துவஞானியாக தோன்றிய ஜே.கிருஷ்ண மூர்த்தி வரையில் நமக்கு சில விடயங்களை போதித்திருப்பதன் ரகசியம் நம்மையும், நம்மை சுற்றி இருக்கும் பிரபஞ்சத்தையும் உயிரோட்டமாக காண்பதற்கு மட்டுமே!

தியானத்திற்கும் மற்ற உயர்வான ஆன்மீக பயிற்சிகளுக்கும் ஒருவருடைய மனம் கவலைகளிலிருந்து விடுபட்டதாக , சலனமற்றதாக இருக்க வேண்டும். ஒரு பரிசுத்தமான, பிராகசிக்கின்ற மனம் மட்டும் தான், முடிவான ஆன்ம ஐக்கியத்தை பெற முடியும் என்பது உறுதி.

" நான் யார்" என்ற கேள்வியை பகவான் ரமணன் எழுப்பினார். அந்த உள்விசாரணை தான் ஒரு யோகியின் முடிவான லட்சியமாக இருக்க முடியும். இந்த நிலையை எய்துவதற்கு உடல் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உடல் என்ற கூட்டை வைத்து தான் இந்த உயர்வான ஆன்மீக நிலையை எட்ட முடியும். வயது முதிர்ந்தாலும் வளமுடன் வாழ, இளைஞனின் மிடுக்குடன் வாழ யோகாவில் திளைத்திட வேண்டும். யோகியாகி விட்டால், உடல் முதிர்ச்சியடையுமே தவிர, சரீரத்தின் வலிமையிலோ, மனோசக்தியையோ இழப்பதில்லை.

தியானத்தின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட மூச்சு அமைகிறது. நடக்கும் போது கூட சிலருக்கு பல ஆண்டுகள் தியானிக்கும் யோகிக்கு கூட கிடைக்காத சில உணர்வுகள் கிடைக்கிறது. இது பற்றி ஓஷோவின் வார்த்தைகளையும், சாதாரண நாசித்துவாரங்கள் மூலம் சுவாசிப்பதற்கும், உள் நாசியில் சுவாசிப்பது பற்றியும் அடுத்து பார்க்கலாம்.
தொடரும்

-ஆனந்தமயன்

Labels:

ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும்

ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் : 

ஞானிகள் அடையும் யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய முடியும் -இந்திய தத்துவ ஞானி ஓஷோ
கடந்த பகுதியில் தியானத்தில் இறங்க விரும்புபவர்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை பூரணமாக தொடர்ந்து நினைத்து அதை தியானமாக செய்யலாம் என்று சொல்லியிருந்தோம். இந்தியாவில் பிறப்பெடுத்த தத்துவஞானியான ஓஷோ அதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார். மனதை தன்போக்கில் இலகுவாக விட்டுவிட்டு இயற்கையாகவே எண்ணங்களை கடந்து போவது தான் தியானம் என்கிறார். குறிப்பாக பல காலம் தவம் இருந்து ஒரு யோகி அடையும் உணர்வை சாதாரணமாக அன்றாடம் நடைப்பயிற்சியில் ஈடுபடும் ஒரு நபர் எதேச்சையாக அடையக்கூடும் என்கிறார். அவர் சொல்வதை சற்று விரிவாகவே இங்கு பார்க்கலாம்.

"மனம் அற்ற நிலையே யோகம் எனப்படும். எந்த விஷய ஞானமும் இல்லாமல், பூரண உணர்வுநிலையே யோகம் ஆகும். ஓர் கண்ணாடியில் படிந்து கிடக்கும் தூசு போல மனதில் விஷய ஞானங்கள் படிந்து கிடக்கின்றன. அவைகள் பகல் பூராவும், ஏன் இரவிலும் கூட, உங்களின் கனவு வாயிலாக உங்களை சுற்றி வருகின்றன. உங்கள் மனம் எதைப்பற்றியாவது நினைத்துக் கொண்டும், எதைப்பற்றியாவது கவலையும், துக்கமும் அடைந்து கொண்டே தான் இருக்கிறது. அடுத்த நாளைப்பற்றி இன்றைக்கே அது தன்னை தயார்படுத்திக் கொள்கிறது. இது தன் இயல்பாக, சுயநினைவின்றி, சதா அடிமனத்தில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இது தான் யோகம் அற்ற நிலையின் இயக்கமாகும்.
இதன் எதிர்ச்செயல்பாடே யோகநிலையாகும். அதாவது, எப்போது எண்ணக்குறுக்கீடுகள் நின்று விடுகின்றனவோ, இறந்த கால எண்ணங்கள் செயலற்றுப் போகின்றனவோ, எவ்வித ஆசையின் தூண்டுதல் இல்லாமல், மனம் சஞ்சலமின்றி நிசப்தமாக ஒடுங்கி நிற்கின்றதோ, அந்த நிலையே யோகமாகும். அந்த அமைதி நிலையில் தான் " உண்மை" வெளிப்படும். வேறு எந்த நிலையிலும் அது தன்னைக்காட்டிக் கொள்ளாது. ஆகவே, யோகம் என்பது மனம் அற்ற நிலையே.

நீங்கள் மனதுடன் யோகத்தை அடையவே முடியாது. ஏனெனில் மனம் ஒரு போதும் தானாக நின்று விடாது. அதன் செயல் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் மனதுடன் போராடாமல், அதே சமயம் அதை சிறிது ஒதுக்கி வைத்து அது கொடுக்கும் விஷயத்துடன் உங்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல், மனம் இயங்குவதை ஒரு சாட்சியாக நின்று பார்த்து " நான், மனம் இல்லை" என்ற உணர்வுடன் செயல்படுங்கள்.
" நான், மனம் இல்லை" என்ற விழிப்புணர்வு நிலையே யோகமாகும். இந்த விழிப்புணர்வு உங்களிடத்தில் ஆழமாக, ஆழமாக பதிய பதிய அமைதியான எண்ணமற்ற நிலை, வெறும் வெட்டவெளியாக படிகம் போன்ற சுத்தமாக சில கணங்கள் தோன்றலாம். அந்த இயக்கமற்ற நிலையில் நீங்கள் உண்மையிலேயே "யார்" என்று அறிந்து கொள்வீர்கள். அப்பொழுது உங்களுக்கு இந்த உலக இயக்க ரகசியங்கள் அனைத்தும் புரியும். இப்படி ஒரு காலததில் நீங்கள் பூர்ண யோகத்தில் எப்போதும் இருந்து விடுவீர்கள். அந்த காலமே இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட காலமாகும்.

ஒன்றையே நினைப்பது என்பது தியானமோ அல்லது யோகமோ அல்ல. ஒன்றையே நினைப்பதில் நீங்களே வலிய ஒரு முயற்சியை மேற்கொள்கிறீர்கள். ஏதோ ஒரு பொருளைச்சுற்றி மனத்தை நிலைப்படுத்த விரும்புகிறீர்கள். இந்த முயற்சியில் இரு வேறு நிலைகள் ஏற்படுகின்றன. உண்மையான தியானத்தில் உங்கள் உள்ளேயும், வெளியேயும் உள்ளவைகள் எந்த வித தடங்கல் இன்றி, வெளியே செல்ல முடியும். அதே போல வெளியே உள்ளவைகள் அனைத்தும் உங்கள் உள்ளே செல்ல முடியும். இரண்டுக்கும் எந்த வரம்போ, எந்த வேலியோ கிடையாது. உள்ளே உள்ளது இயங்குகிறது. இரண்டு மாறுபட்ட விழிப்புணர்வு கிடையாது. இது தான் உண்மையான தியானத்தின் நிலையாகும்.

ஆனால் ஒன்றையே நினைத்தல் என்பது இரு வேறான விழிப்புணர்வு ஆகும். அதனால் தான் ஒன்றையே நினைத்தால் களைப்பையே உண்டு பண்ணுகிறது. நீங்கள் எளிதில் களைப்படைவதற்கு, ஒன்றையே நினைத்துக் கொண்டிருத்தலே காரணமாகிறது. உங்களால் இருபத்து நான்குமணி நேரமும் ஒன்றையே நினைத்துக் கொண்டிருந்தல் என்பது முடியாத காரியம். ஒன்றையே நினைத்தல் என்பது இயற்கையான செயல் அல்ல. உண்மையான தியானம் என்பது உங்களுக்கு களைப்பையே உண்டாக்காது. நாள் பூராவும், ஏன் ஆண்டு முழுவதும் தியானம் தொடர்ந்து செயல்படுவதாகும். அது பேரின்பமாக மாற முடியும். அது ஒரு குறிக்கோள் இல்லாத பரிபூரண ஓய்வாகும்.

ஒன்றையே நினைப்பதன் மூலம் உங்கள் மனம் ஒரு முடிவுக்கு, ஒரு குறிக்கோளுக்கு முன்பே வந்து அதற்காக செயல்படுகிறது. ஆகவே நீங்கள் அதற்காக ஏதோ செயல்படுகிறீர்கள். உண்மையான தியான முறையில் எந்த குறிக்கோளும் தொக்கி நிற்கவில்லை. நீங்கள் குறிப்பாக எதுவும் அதற்காக செய்ய வேண்டியது இல்லை. நீங்கள் "நீங்களாகவே" இருக்கிறீர்கள். மனதாலும், உடலாலும் எதையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து, தங்கள் உள்மனம் சுரக்கும் ஊற்றையும், தானே முளைக்கும் அந்த அரிய பூக்களையும் உணர்ந்தார்கள். நன்றாக ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் "தானாகவே செயல்படுதல்" என்பதை. அந்த ஊற்று தானாகவே சுரக்கிறது. அந்த பூச்செடிகள் தானாகவே மேல் நோக்கி வளர்கின்றன.

இந்த நிலை, அதாவது எப்பொழுது நீங்கள் வாழ்க்கையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதன் போக்கிலேயே விட்டு விடுகிறீர்களோ, எப்பொழுது உங்கள் விருப்பப்படி அமைய அதற்கு கட்டளை எதும் பிறப்பிக்கமால் இருக்கிறீர்களோ, அதே போல் அதை உங்கள் நோக்கப்படி நடத்த ஆசைப்படாமல் இருக்கிறீர்களோ, உங்கள் மூளைத்திறனைக்கொண்டு அதை மாற்றி போதனைகளை அதன் மேல் திணிக்கமால் இருக்கிறீர்களோ, அந்த இயற்கையான கோட்பாடுகளற்ற, அந்த நேர வாழ்க்கைத்தன்மையை தியானம் என்று அழைக்கலாம்.

யோகம் என்பது "இப்பொழுது, இங்கே, இதோ நிகழ்வது தான். " அது ஒரு முழுமையான நிகழ்கால நிகழ்ச்சி. நீ தியானம் என்று ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் தியானத்தில் எப்பொழுதும் இருக்கலாம். ஆனால் ஒன்றையே நினைத்துக் கொண்டு உன்னால் எப்பொழுதும் இருக்க முடியாது. ஒன்றையே நினைத்துக் கொண்டிருப்பது மனித இயல்பு தான். ஆனால் யோகம் என்பது கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது. புனிதத்தன்மை உடையது. அதற்கும், ஒன்றையே நினைத்துக் கொண்டிருப்பதற்கும் அவ்வளவாக தொடர்பு கிடையாது. தியானம் என்பது எதையும் வலுக்கட்டாயமாக உங்கள் மேல் திணித்துக் கொள்வதல்ல".

தியானம் அல்லது யோகம் என்பது விளையாட்டான விடயம் அல்ல. சில சமயம் அவை உங்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணும். ஏனெனில், தியானத்தால் நீங்கள் உங்கள் மனதின் ஆழமான இடத்தில் விளையாட ஆரம்பிக்கிறீர்கள். உங்களை அறியாமலே செய்யும் தவறு ஒரு பெரிய ஆபத்தை உண்டு பண்ணிவிடும். ஆகவே, இதில் எதையும் புதிதாக கண்டு பிடிக்க முயலாதீர்கள். உங்களால் முழு ஈடுபாட்டுடன் கடைபிடிக்க முடிகிற இரண்டு வகை தியான முறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு தியான முறை மகிழ்ச்சியை கொடுத்தால், அதில் ஆழ்ந்து முழு ஈடுபாட்டுடன் செல்லுங்கள். ஆனால் அதை ஒரு பழக்கமாக்கி, மனதை அடிமையாக்கி விடாதீர்கள். ஏனெனில் ஒரு நாள் அந்த முறையை விட்டு விடும்படி நேரிடும். நீங்கள் உங்கள் மனதை அதனுடன் நெருங்கி சம்பந்தப்படுத்தி விட்டால் அது போதை மருந்து போல் வேலை செய்து, உங்கள் மனதை அடிமைப்படுத்தி விடும். பிறகு அந்த முறையை உங்கள் இஷ்டப்படி விடுவது கஷ்டம். எனவே இரண்டு முறைகளை வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் ஈடுபடுங்கள். அதில் முழுமையாக செல்லுங்கள். பிறகு அதை கைவிடுங்கள். மற்றொரு முறையை பின்பற்றுங்கள். இப்படி மாறி மாறி தொடருங்கள். ஆத்மீகப்பயணத்தில் ஒரே தியான முறையை மட்டும் கடைப்பிடித்து கடைசி எல்லையை அடைவது என்பது மிக மிக அரிது.

மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது தியானம் அல்ல. முழுமையான விழிப்புணர்வு தான் தியானம். உங்கள் உடல் அசைந்து கொண்டு இருக்கும் போது, அதாவது ஓடும் பொழுது, குதிக்கும் பொழுது, உங்களுடைய எச்சரிக்கை உணர்வு இயல்பாகவும், அதிகமாகவும் இருக்கும். ஆனால் ஓய்வாக இருக்கும் பொழுது எச்சரிக்கை உணர்வு மிகவும் குறைந்து உங்களை தூக்கத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் படுக்கையில் இருக்கும் பொழுது எச்சரிக்கை உணர்வு மிகமிக குறைவாக இருக்கும். ஆனால் உடல், மனம், உயிர் மூன்றும் ஒன்றாக எந்த நிலையிலும் ஒன்றாக செயல்படும்படி கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு முதலில் ஒரு வழியை கண்டுபிடியுங்கள். ஓடும் பயிற்சி செய்பவர்கள், இந்த மூன்றும் ஒன்றாக இயங்குவதை உணர்ந்திருக்கிறார்கள். ஓடுவது ஒரு யோகம் என்று நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் பல பேர் யோகத்தின் அனுபவத்தை, ஓடும் போது அடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இது அவர்களை அறியாமலே கிடைக்கிறது. கடவுள் தன்மையை அடைய ஓடுதல் கூட ஒரு யோகம் தான்.

அதிகாலை வேளையில் காற்று மென்மையாகவும், தெளிவாகவும் இருக்கும் பொழுது, இந்த உலகம் தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு வரும் பொழுது, நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது உங்கள் உடல் மிக அழகாக அசைந்து கொண்டு செல்கிறது. அந்த புதுமை நிறைந்த இளங்காற்றும், இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு இந்த உலகம் வரும் நேரமும், பறவைகள் பாட்டிசைக்கும் அற்புதமான வேளையும், உங்களை உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்கும். அப்பொழுது, ஒரு கட்டத்தில் ஓடுபவர் முற்றிலும் மறைந்து "ஓடுதல்" மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும். அங்கே மனம், உடல், உயிர் என்ற மூன்றும் ஒன்றாகி இயங்கிக் கொண்டிருக்கும். திடீரென்று உங்கள் உள்ளே ஒரும் பேரின்பம், அதிர்ச்சி அல்லது உச்சம் ஏற்படும். இந்த துரிய நிலைக்கு ஓடுபவர்கள் தற்செயலாக அவர்களே அறியாமல் வந்திருக்கிறார்கள். ஆனால் அந்த அனுபவம் தாங்கள் ஓடுவதால் வந்ததாக எண்ணி யோகநிலை உணர்வின் அனுபவத்தை தவறவிட்டிருக்கிறார்கள். ஆனால், அதை உணர்வுபூர்வமாக எதிர்கொண்டால், அந்த வேளை மிக அற்புதமாகவும், உங்கள் உடல் மிக ஆரோக்கியமாகவும், ஏன் இந்த உலகம் மிகமிக அழகானதாகவும் தோன்றும்.
நான் அறிந்தவரை மற்றவர்களை விட ஓடும்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மற்ற எவரைக்காட்டிலும் மிக எளிதாக யோக உச்சத்திற்கு வர முடியும்".

- ஓஷோவின் தியானமுறைகள்

அடுத்த தொடரில் சாதாரண மூச்சு மற்றும் உள்நாசி மூலம் சுவாசிக்கும் முறை பற்றியும், தியானத்திற்கு தயார் ஆவதற்கான தயாரிப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்.

Labels: